திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே ரியல்எஸ்டேட் அதிபரை கொலை செய்து தப்பியோடிய ஓய்வுபெற்ற ராணுவ வீரரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி வி.டி கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்தவர் திம்மராயன்(55). ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார்.
இந்நிலையில், பொன்னேரி அருகேயுள்ள அரியான் வட்டத்தில் உள்ள தனது வாழைதோப்பில் திம்மராயன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். அரிவாள் வெட்ட காயங்கள் அவரது உடலில் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திம்மராயன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திம்மராயன் வாழைதோப்புக்கு சென்றபோது அவரை பின் தொடர்ந்து சென்ற நபர் அரிவாளால் வெட்டி கொலை செய்திருப்பது முதறகட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, ‘‘ வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் திம்மராயனின் சகோதரி மகன் சக்கரவர்த்தி(42). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரிடம் அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளார். அந்த பணத்தை திருப்பி கொடுத்து நிலத்தை மீட்க முடியாமல் அவர் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் திம்மராயனுக்கு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, திம்மராயன் அந்த நிலத்தை மீட்டு தனது பெயரில் எழுதிக் கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக சக்கரவர்த்திக்கும், திம்மராயனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (நேற்று) காலை வாழை தோப்புக்கு சென்ற திம்மராயனை பின் தொடர்ந்து சென்ற சக்கரவர்த்தி அங்கு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திம்மராயனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
அப்போது, அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது திம்மராயன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து வந்த தகவலின் பேரில், காவல் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சக்கரவர்த்தியை தேடி வருகிறோம்’’ என்றனர். இதையடுத்து, கொலை நடந்த இடத்தை ஏடிஎஸ்பி கோவிந்தராஜ் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.