திருச்சி: மின் மீட்டர் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய உதவிச் செயற்பொறியாளர் உட்பட 2 பேர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
திருச்சி கே.கே.நகர் இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். அதே பகுதியில், தான் அமைத்து வரும் இறகுப்பந்து மைதானத்துக்கு மும்முனை மின் இணைப்பு கோரி, கே.கே.நகர் தென்றல் நகரில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், மின் மீட்டர் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக மின் வாரிய உதவிச் செயற்பொறியாளர் சந்திர சேகரை (58) அணுகிய போது, அவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீஸார் யோசனைப்படி, சீனிவாசன் நேற்று தென்றல் நகர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்த சந்திரசேகரிடம் லஞ்ச பணத்தைக் கொடுத்த போது, அவர் அதை வாங்கி, தனது தனிப்பட்ட உதவியாளரான கிருஷ்ண மூர்த்தியிடம் (34) கொடுத்தார்.
அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், கிருஷ்ண மூர்த்தியையும், சந்திர சேகரையும் கைது செய்தனர். தொடர்ந்து, தென்றல் மின் வாரிய அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.