கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த சுமார் 32 வயது மதிக்கத்தக்க, சமூக நலத்துறையில் கடைநிலை ஊழியராக பணியாற்றும் பெண் நேற்று முன்தினம் குடும்பத்தோடு வீட்டிலிருந்தபோது அவரது செல்போனுக்கு வீடியோ கால் ஒன்று வந்தது. அடையாளம் தெரியாத நபர் எண்ணில் இருந்து வீடியோ கால் வந்ததால் அதை துண்டித்துள்ளார்.
மீண்டும், மீண்டும் வீடியோ கால் வந்ததால் அதனை ஆன் செய்தார். செல்போன் திரையில் தோன்றிய ஒரு ஆண் தன்னுடைய ஆடைகளை கழற்றி நிர்வாணமாக தோன்றினார். அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டு, கணவரிடம் செல்போனை காட்ட ஓடியதால் அந்த நபர் செல்போனை துண்டித்துவிட்டார். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
அப்பெண்ணுக்கு வந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, 'நன்னு பி' என்று ஆங்கிலத்தில் பெயர் இருந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிம்கார்டு வாங்கப்பட்டிருந்ததும், அந்த எண்ணின் வாட்ஸ்-அப் டி.பியில் பிரபல இந்தி நடிகை சாக்சி சர்மா புகைப்படத்துடன் 'நீதான் என் வாழ்க்கை' என்று இந்தியில் எழுதப்பட்டிருந்ததையும் கண்டனர். இதைத்தொடர்ந்து அந்த எண்ணுக்கு போலீஸார் தொடர்பு கொண்டபோது (ஸ்கேம் பிராடு) என்றும் ட்ரூ காலில் வந்துள்ளது.
தமிழக பெண்களை குறிவைத்து வடமாநில கும்பல் ஆபாச வீடியோ கால் செய்து மிரட்டி வருகிறதா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.