திருப்பூர்: உடுமலை அருகே சாலை விபத்தில் செவிலியர் உயிரிழந்த தகவல் கேட்டு, அதிர்ச்சியில் பெண் மருத்துவரும் உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே செல்லப்பம்பாளையம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு மருத்துவராக உமா ராணி (45) பணிபுரிந்து வந்தார். இவர் திருமணமாகாதவர். கரட்டூரில் பெற்றோருடன் வசித்து வந்தார். அதே சுகாதார நிலையத்தில் 'மக்களை தேடி' மருத்துவம் திட்ட செவிலியராக சடையபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிரியா (21) பணிபுரிந்து வந்தார். இவர் திருமணமாகி கணவர் விக்னேஷ்வரனுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், பூலாங்கிணர் என்ற கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து மருந்துகள் அளித்துவிட்டு சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பிரியா உயிரிழந்தார். தகவலறிந்து உடுமலை போலீஸார் சென்று பிரியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த தகவல் செல்லப்பம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த மருத்துவர் உமா ராணிக்கு தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை செய்திருந்தவர், அதிர்ச்சியில் பணிபுரிந்த இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இருவரும் ஒரே நாளில் உயிரிழந்தபோதும், வேறு வேறு இடங்களில் நிகழ்ந்ததால் உடனடியாக வெளியில் தெரியவரவில்லை. போலீஸாரின் விசாரணைக்கு பின்னரே உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது, "பிரியாவின் உயிரிழப்புக்கு காரணமான நபர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்றனர்.