கோவையில் வங்கி கணக்கு தொடங்கி, சைபர் க்ரைம் மோசடியாளர்களுக்கு உதவிய மூவரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை நவஇந்தியா பகுதியைச் சேர்ந்தவர் மெஹூல் பி.மேத்தா(43). இவர், ஆன்லைன் பங்கு வர்த்தகம் தொடர்பாக ஜோதிசர்மா என்பவர் தொடர்புகொண்டு பேசியதை நம்பி, செயலியை பதிவிறக்கம் செய்து, பல்வேறு தவணைகளில் ரூ.11 லட்சத்து 89 ஆயிரத்தை முதலீடு செய்தார். செயலியில் உள்ள அவரது வங்கிக் கணக்கில் லாபத் தொகையுடன் சேர்த்து ரூ.15 லட்சம் இருப்பது போல் காட்டப்பட்டது. ஆனால் அத்தொகையை அவரால் எடுக்கவில்லை. இது பற்றி மாநகர சைபர் க்ரைம் போலீஸில் மெஹூல் பி.மேத்தா புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிந்து, மோசடி நபர்கள் யார், அவர்களுக்கு பணம் சென்ற வங்கிக் கணக்குகள் யாருடையது என விசாரித்தனர். அதில், கிணத்துக் கடவு சாரதா மணி வீதியைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணன் (40), வஉசி வீதியைச் சேர்ந்த மணிகண்டன் (39), சொலவம்பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன் (39) ஆகியோர், கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, சைபர் க்ரைம் மோசடியில் ஈடுபடும் நபர்களுக்கு 10-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளைத் தொடங்கிக் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து லேப்டாப்,செல்போன்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், காசோலைகள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.