திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கார் மீது கல்வீசிய பழநி அருகே அமரபூண்டியை சேர்ந்தவரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் திங்கள்கிழமை இரவு வரை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில் இருந்தார். அப்போது திடீரென மாவட்ட ஆட்சியரின் கார் முன்புற கண்ணாடியில் கல் ஒன்று பட்டு தெறித்தது. இதில் கண்ணாடி உடைந்தது.
அங்கு பாதுகாப்பில் இருந்த போலீஸார் உடனடியாக சென்று கார் மீது கல்வீசியவரை பிடித்து தாடிக்கொம்பு காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.
பிடிபட்டவர் பழநி அருகே அமரபூண்டியை சேர்ந்த கணேசன் (37) என்பது தெரியவந்தது. இவர் பட்டா எஸ்எல்ஆர் காப்பி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இது கிடைக்க தாமதம் ஆகவே ஆத்திரத்தில் இரவு குடிபோதையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த கணேசன், மாவட்ட ஆட்சியரின் கார் மீது கல்வீசி தாக்கியுள்ளார்.
தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். கணேசன் குடிபோதையில் இருந்ததால் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.