திருப்போரூர்: திருப்போரூரை அடுத்துள்ள இள்ளலூர் ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பந்தமூர்த்தி. இவரது மகன் கங்காதரன் (36). இவர் திருப்போரூர் மத்திய ஒன்றிய பாமக செயலாளராக இருந்தார். இவருக்கு திருமணமாகி பார்கவி என்ற மனைவியும் ஓவியா (5), தேவசேனா (2) என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
கங்காதரன் மருந்து விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி சொந்த வேலையாக மதுராந்தகம் சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் திருக்கழுக்குன்றம் வழியாக திருப்போரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திருப்போரூர் மின் வாரியத்தில் வயர்மேனாக பணிபுரியும் மூர்த்தி (40) என்பவர் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் தனது வீடு உள்ள திருக்கழுக்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தண்டலம் அருகே இரவு 9 மணி அளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கங்காதரன் தூக்கி வீசப்பட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கங்காதரன் திருப்போரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாமக ஒன்றிய செயலாளரின் உடலுக்கு திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.