மாமியாரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகன் கைது: மதுரவாயலில் அதிர்ச்சி சம்பவம்


சென்னை: மதுரவாயல் பகுதியில் மாமியாரை கல்லால் தாக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளியான மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, மதுரவாயல் பகுதியில் சுந்தர் மனைவி பிரியா (40) என்பவர் தனது மகள் கீர்த்திகா என்பவருடன் வசித்து வருகிறார். கீர்த்திகாவின் கணவர் ஜெயசீலன் என்பவர் அடிக்கடி சிறைக்கு செல்வதால், கீர்த்திகா தனது அம்மா வீட்டில் கடந்த 3 வருடங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 13ம் தேதி அன்று இரவு, மேற்படி ஜெயசீலன், தனது மனைவி கீர்த்திகாவை அழைத்தபோது, கீர்த்திகாவின் அம்மா பிரியா என்பவர் தனி வீடு பார்த்துவிட்டு பின்னர் தன் மகளை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

அப்போது, பிரியாவிற்கும் அவரது மருமகன் ஜெயசீலன் என்பவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜெயசீலன் தகாத வார்த்தைகள் பேசி, கீழே கிடந்த கல்லை எடுத்து பிரியாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து பிரியா கொடுத்த புகாரின் பேரில், மதுரவாயல் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ராமச்சந்திரன் மகன் ஜெயசீலன்(31) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட ஜெயசீலன் என்பவர் மதுரவாயல் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது கொலை, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி ஜெயசீலன் விசாரணைக்குப் பின்னர் நேற்று (16.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x