தென்காசி: சிவகிரி பஜனைமடம் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி (75). விவசாயம் செய்து வருகிறார். இவரது 3 மகன்களுக்கு திருமணமாகி விட்டது. இவர், வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றுள்ளார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அதில் இருந்த ரூ.19 லட்சம் பணம் திருட்டு போனதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் சிவகிரி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். வீட்டு மாடியில் உள்ள புகைக்கூண்டு சிலாப்பை அகற்றி, அதன் வழியாக வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து, பீரோவை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.