ஆன்லைன் லாட்டரியில் பரிசு விழுந்ததாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி: புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்


புதுச்சேரி: தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் உமாகாந்தன். இவர் பேஸ்புக் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்த போது, லாட்டரி சீட்டு தொடர்பாக விளம்பரத்தை பார்த்துள்ளார். பின்னர் அதனை கிளிக் செய்து ரூ.40 கட்டணம் செலுத்தி, லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார்.

சிறிது நேரத்தில் மர்மநபர் ஒருவர் உமாகாந்தனை தொடர்பு கொண்டு, கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டு விற்பனையாளர் பேசுவதாக கூறியுள்ளார். மேலும் தாங்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.8 லட்சம் பரிசு விழுந்திருப்பதாகவும், இதனை டெபாசிட் கட்டணமாக ரூ. 3 லட்சத்து 6 ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய உமாகாந்தனும் ரூ.3 லட்சத்து 6 ஆயிரத்தை மர்ம நபருக்கு அனுப்பியுள்ளார். உடனே மர்ம நபர் உமாகாந்தனின் இணைப்பை துண்டித்துவிட்டார். அவர் பலமுறை தொடர்பு கொண்டும் முடியவில்லை.

அதன்பிறகே உமாகாந்தன் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x