கோவையில் சோகம்: உடல் பருமனுக்கு சிகிச்சை பெற்ற பெண் தற்கொலை


கோவை: உடல் பருமனுக்கு சிகிச்சை பெற வந்த பெண் தூக்க மாத்திரை தின்று தற்கொலை செய்துகொண்டார். அவரது சகோதரரை போலீஸார் மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் இப்ராஹிம் பாதுஷா. இவரது சகோதரி சம்ஷத் பேகம் (50). இருவரும் உடல் பருமனால் அவதிப்பட்டு வந்தனர். இரு தினங்களுக்கு முன்பு உடல் எடையைக் குறைக்க ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக கோவை வந்து, ராம் நகரில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கினர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு பணம் எடுப்பதாக வெளியே சென்ற இப்ராஹிம் பாதுஷா வெகு நேரமாகியும் அறைக்கு திரும்பவில்லை. இதையடுத்து, ஹோட்டல் நிர்வாகத்தினர் அறைக் கதவை தட்டினர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அவர்களே திறந்து பார்த்தபோது சம்சஷ் பேகம் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

இது குறித்து காட்டூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தவ்லத் நிஷா உள்ளிட்ட போலீஸார் சம்ஷத் பேகத்தின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். சம்சஷ்பேகம் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் சாப்பிட்டது தெரியவந்தது.

இதனிடையே, வெளியே சென்ற அவரது சகோதரர் இப்ராஹிம் பாதுஷாவை வாளையாறு அருகே போலீஸார் மீட்டு அழைத்து வந்தனர். அவர் பிளேடை விழுங்கி தற்கொலைக்கு முயன்றதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இருவருக்கும் உறவினர்கள் இல்லாத நிலையில் சம்சஷ் பேகத்தின் உடல் உக்கடம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து, இப்ராஹிம் பாதுஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

x