ராணிப்பேட்டை: காசோலை மோசடி வழக்கில் மருத்துவரின் மனைவிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து வாலாஜா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தென்கடப்பந்தங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் உமாதேவி (45). இவரது கணவர் ஜெயக்குமார் சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். உமாதேவி காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் சங்கர்கணேஷ் (44) என்பவரிடம் கடந்த 2021-ம் ஆண்டு 7 லட்சம் ரூபாய் கடனாக பெற்றார். அந்த கடனுக்காக வங்கி காசோலை ஒன்றை உமாதேவி, சங்கர்கணேஷிடம் வழங்கியுள்ளார்.
உமா தேவி கொடுத்த காசோலையை சங்கர் கணேஷ் தன்னுடைய வங்கி கணக்கில் செலுத்திய போது, உமா தேவி கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்துவிட்டது. இதனால் தன்னை ஏமாற்றி மோசடி செய்ததாக சங்கர் கணேஷ் உமா தேவி மீது வாலாஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த வாலாஜா மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் -1 நீதிமன்ற நீதிபதி பிரஹந்தா தீர்ப்பு வழங்கினார். அதன்படி, மோசடியில் ஈடுபட்ட உமா தேவிக்கு 6 மாதம் சிறை தண்டனையும், வாங்கிய கடன் தொகை ரூ.7 லட்சத்தை திரும்ப தர வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.