கிருஷ்ணகிரி: ஓசூரில் வீட்டு மின் இணைப்பு வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக மின்வாரிய உதவிப் பொறியாளர் மற்றும் வணிக ஆய்வாளரை போலீஸார் கைது செய்தனர்.
ஓசூர் பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (44). இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டுக்கு மின் இணைப்பு பெற முதல் சிப்காட் பகுதியில் உள்ள மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், மின் இணைப்பு வழங்க மின்வாரிய உதவிப் பொறியாளர் சிவகுரு மற்றும் வணிக ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் ராஜேந்திரனிடம் ரூ.35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். முதலில் ரூ.5 ஆயிரம் வழங்கிய நிலையில், மீதி பணத்தை வழங்க விரும்பாத ராஜேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் செய்தார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை ராஜேந்திரன் நேற்று உதவிப் பொறியாளர் சிவகுரு மற்றும் பிரபாகரனிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜ், காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீஸார், சிவகுரு மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.