திண்டுக்கல்: வடமதுரை அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற திருச்சி பூ வியாபாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த 10 பேர் தனியார் நிறுவன வேலைவாய்ப்புக்காக திருநெல்வேலியில் தேர்வு எழுதிவிட்டு, நேற்று காலை காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை ஓட்டுநர் சுரேந்திரன் ஓட்டி வந்தார். திண்டுக்கல்லை அடுத்த வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே திருச்சி நான்கு வழிச்சாலையில் சென்றபோது, திடீரென டயர் வெடித்ததில் கார் தாறுமாறாக ஓடியது. இதில் முன்னால் சென்ற 2 பைக்குகள் மீது மோதியது.
அதில் ஒரு பைக்கில் சென்ற திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே மொட்டையம்பட்டியைச் சேர்ந்த பூ வியாபாரி பெரியசாமி (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பைக்கில் சென்ற நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்த அஜய், அருண், மகேந்திரன் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.