காங்கயம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரக் கொலை: ஒடிசா தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


திருப்பூர்: பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒடிசா தொழிலாளிக்கு சாகும் வரை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கரியகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி (35). இவர், அப்பகுதியிலுள்ள நூல் மில்லில் வேலை செய்து வந்தார். கடந்த 2022 செப்டம்பர் மாதம் நூல் மில்லுக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்பாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் ஊதியூர் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வந்தனர். நூல் மில் சுற்றுப்புற பகுதியில் தேடியபோது, அங்குள்ள பி.ஏ.பி.வாய்க்கால் அருகே புதருக்குள் ரேவதி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து ஊதியூர் போலீஸார் நடத்திய விசாரணையில், "அப்பகுதியில் அரிசி ஆலையில் தங்கி வேலை செய்து வந்த ஒடிசாவை சேர்ந்த உமேஷ் ரிஷிதேவ் (43) என்பவர், சம்பவத்தன்று வேலை முடிந்து ரேவதி தனியாக நடந்து சென்றபோது, பின்தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததுடன், தலையில் கல்லால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது. இந்த வழக்கில் உமேஷ் ரிஷிதேவை ஊதியூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் உமேஷ் ரிஷிதேவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜமீலாபானு ஆஜரானார். இதையடுத்து, கோவை மத்திய சிறையில் உமேஷ் ரிஷிதேவ் அடைக்கப்பட்டார்.

x