மயிலாடுதுறையில் 2 இளைஞர்கள் படுகொலையும், எதிர்வினையும் - ஒரு பார்வை


மயிலாடுதுறையில் 2 இளைஞர்கள் படுகொலை: மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரை அடுத்த முட்டம் கிராமத்தைச் சேர்ந்த 28 வயது தங்கதுரை, 34 வயது ராஜ்குமார் ஆகியோர், புதுச்சேரி சாராயம், மது பாட்டில்களை காரைக்காலில் இருந்து சட்ட விரோதமாக வாங்கி வந்து, அப்பகுதியில் விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக ராஜ்குமார் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தப் பின்னணியில், தங்கதுரையின் சகோதரரர் மூவேந்தனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 28 வயது தினேஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் வெள்ளிக்கிழமை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், தினேஷ், அவரது நண்பர்களான 25 வயது ஹரிஷ், அவரது சகோதரரான 19 வயது அஜய், மயிலாடுதுறை சீனிவாசபுரத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவர் ஹரி சக்தி ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த தங்கதுரை, ராஜ்குமார், மூவேந்தன் ஆகியோர் தினேஷிடம் தகராறு செய்து, கத்தியால் குத்தியுள்ளனர். தடுக்க முயன்ற ஹரிஷ், ஹரி சக்தி, அஜய் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

இதில் ஹரிஷ் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஹரிசக்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அஜய் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மக்கள் போராட்டமும், போலீஸ் கைது நடவடிக்கையும்: சாராய விற்பனையை தட்டிக் கேட்டதாலும், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததாலும் இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், சாராய வியாபாரிகளை கைது செய்யக் கோரியும் வலியுறுத்தி அரசு மருத்துவமனை அருகே உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததால், மறியல் கைவிடப்பட்டது.

இது தொடர்பாக பெரம்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சாராய வியாபாரிகள் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததால், போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

டிஜிபி சங்கர் ஜிவால் சொல்வது என்ன?: டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மூவேந்தன், தினேஷ் ஆகியோருக்கிடையே முன்விரோதம் இருந்துள்ளது. ஒரே தெருவில் வசிக்கும் இளைஞர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை சம்பவம் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், மது விற்பனை தொடர்பாக கொலை நடந்திருப்பதாக சிலர் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே, இது தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் காட்டம்: “இந்த படுகொலை சம்பவம் முன்விரோதமே காரணம் என மாவட்ட காவல் துறையினர் சார்பில் அளித்துள்ள விளக்கம் இப்பகுதியில் நடக்கும் கள்ளச்சாராய வியாபாரத்தை மூடி மறைக்கவும், இதற்கு சட்டவிரோதமாக உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு துறை அதிகாரிகளை பாதுகாக்க கூடிய செயலாகும்.

எனவே, இந்த படுகொலையில் ஈடுபட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் சார்பில் 8-க்கும் மேற்பட்ட புகார்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக இருந்த பெரம்பூர் காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர், மதுவிலக்கு பிரிவினர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும், தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயற்குழு அரசை வலியுறுத்துகிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை சம்பவத்தில் இபிஎஸ் சாடல்: “மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும், கொல்லப்படுவதும் என, மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை நடத்தும் திமுக முதல்வர் ஸ்டாலின், தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்: மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் பகுதியில் இருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு அரசும், காவல் துறையும் பொறுப்பேற்க வேண்டும். இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கண்டனம்: “மயிலாடுதுறையில் நடந்த இரட்டைக் கொலை குற்றவாளிகளை போலீஸார் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழகத்தில் யார் ஆட்சி அமைந்தாலும் கொலை, கொள்ளை நடக்கத்தான் செய்கிறது. ஆனால், அதனை கடந்து போக முடியாது. 24 மணி நேரமும் அரசு கண்காணித்து வருகிறது. இருப்பினும் இந்த படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி: “தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி காவல் துறைக்குத் தெரியாமலா இருக்கும்?” என மயிலாடுதுறையில் சாராய வியாபாரிகளால் இரு இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம்: “தமிழகம் முழவதும் தொடர்ந்து கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பும், கொலைகளும், பல்வேறு குற்றச் செயல்களும் அரங்கேறிகொண்டு இருக்கையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு என்ன செய்துகொண்டு இருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்த தமிழக அரசு, தற்போது கள்ளச்சாராயம் விற்பனையை தடுத்து கொலையானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் காட்டம்: “தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சமூக விரோதிகளின் ஆட்சியா? சாராய விற்பனையை தட்டிக் கேட்பவர்கள், மணல் திருட்டை தடுத்து நிறுத்துவோர், மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்து புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படும் அளவுக்கான பதற்றமான சூழலை வாடிக்கையாக்கிய திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்துக்குரியது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக கூறியுள்ளார்.

சமூக விரோதிகளின் கூடாரமான தமிழகம்: சீமான்: “அடுத்தடுத்து சமூக ஆர்வலர்கள் படுகொலைகள் செய்யப்படும் பேரவலம். திமுக ஆட்சியில் முற்றாகச் சீரழிந்துள்ள சட்டம் - ஒழுங்கு. சமூக விரோதிகளின் கூடாரமானது தமிழகம்” என்று தெரிவித்துள்ளார்.

x