மளிகை கடைக்குள் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு - குண்டர் சட்டத்தில் கரூர் இளைஞர் சிறையிலடைப்பு


முகமது அன்சாரி

கரூர்: மளிகை கடைக்குள் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கரூர் கருப்பகவுண்டன்புதூர் மேற்கு கங்கா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (52). அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி (21). இவர் ஜன.18-ம் தேதி மதுபோதையில் மளிகை கடைக்கு சென்று சிகரெட் கேட்டுள்ளார். சுப்பிரமணி சிகரெட் விற்பனை செய்வதில்லை என கூறியதால் பீடி வாங்கி சென்றுள்ளார். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த முகமது அன்சாரி குவாட்டர் மது பாட்டிலில் மண்ணெண்ணையை நிரப்பி, துணியை திரி போல திரித்து நெருப்பு பொருத்தி கடைக்குள் வீசிவிட்டு தப்பியோடி வி ட்டார். இதில் கடையில் வைக்கப்பட்டிருந்த 20 லிட்டர் காலி தண்ணீர் கேன்கள் 5 சேதமடைந்தன.

இதுதொடர்பாக தாந்தோணிமலை காவல் நிலையத்தில் சுப்பிரமணி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து முகமது அன்சாரியை தேடி வந்தனர். கொளந்தானூர் மயானம் அருகே பதுங்கியிருந்த அவரை ஜன.19-ம் தேதி போலீஸார் பிடிக்க முற்பட்டனர். அப்போது முகமது அன்சாரி தப்பியோட முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்பு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீது தாந்தோணிமலை, வெங்கமேடு காவல் நிலையங்கள், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளன. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் உத்தரவின்பேரில் இன்று (பிப். 15) முகமது அன்சாரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸ் திருச்சி மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.

x