வேலூர் மாவட்டத்தில் காணாமல்போன 230 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு


படம்: வி.எம்.மணிநாதன்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் காணாமல்போன ரூ.46 லட்சம் மதிப்பிலான 230 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் ஒப்படைத்தார்.

வேலூர் மாவட்டத்தில் காணாமல் போகும் செல்போன்களை கண்டுபிடிக்க வசதியாக பொதுமக்கள் எளிய முறையில் புகார் அளிக்க செல் ட்ராக்கர் என்ற கூகுள் படிவம் பதிவு செய்யும் நடைமுறை கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் சி.இ.ஐ.ஆர் என்ற தளங்களின் வழியாகவும் செல்போன்களை கண்டறியும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி, மாவட்டத்தில் இதுவரை 8 கட்டங்களாக மொத்தம் ரூ.2 கோடியே 92 லட்சத்து 92 ஆயிரத்து 400 மதிப்பிலான 1,524 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இதன்தொடர்ச்சியாக, செல் ட்ராக்கர், மற்றும் சி.இ.ஐ.ஆர் ஆகிய தளங்களின் வழியாக பதிவு செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில், 9-ம் கட்டமாக ரூ.46 லட்சம் மதிப்பிலான 230 செல்போன்கள் மீட்கப்பட்டு அவற்றை வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உரியவர்களிடம் இன்று (பிப்.15) ஒப்படைத்தார்.

இதன்மூலம், மாவட்டத்தில் இதுவரை ரூ.3 கோடியே 38 லட்சத்து 92 ஆயிரத்து 400 மதிப்பிலான 1,754 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மதிவாணன் தெரிவித்தார். அப்போது, சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரஜினிகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் கூறும்போது, ‘‘செல் ட்ராக்கரைவிட மத்திய அரசின் சி.இ.ஐ.ஆர் தளம் மூலமாக காணாமல் போன செல்போன் குறித்த புகாரினை பதிவு செய்யும்போது உடனடியாக அந்த செல்போனை யாரும் பயன்படுத்த முடியாதபடி செய்யப்படுகிறது.

இதனால், திருடப்பட்ட செல்போனை கொண்டு அதில் உள்ள யு.பி.ஐ செயலி வழியாக உரிமையாளரின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருட முடியாது. மேலும், அந்த செல்போனை வேறு உபயோகத்துக்கும் பயன்படுத்த முடியாது. எனவே, பொதுமக்கள் தங்கள் செல்போன் காணாமல்போனால் உடனடியாக மத்திய அரசின் சி.இ.ஐ.ஆர் தளம் மூலமாக புகாரினை பதிவு செய்யலாம்’’ என்றனர்.

x