திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி - அர்ச்சகர் உட்பட 2 பேர் கைது


வெங்கடேஸ்வரன், ஜனனி பரத்

காரைக்கால்: திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதள முகவரி தொடங்கி, பக்தர்களிடம் பண மோசடி செய்த புகாரின்பேரில் கோயில் அர்ச்சகர் உட்பட 2 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது.

இக்கோயிலின் நிர்வாக மேலாளர் எஸ்.சீனிவாசன் திருநள்ளாறு காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார். அதில், “திருநள்ளாறு கோயிலில் அர்ச்சனை செய்வதற்காக கோயிலின் இணையதளம் வாயிலாக 2 நபர்கள் ரூ.5,481 அனுப்பியதாகவும், அதற்குரிய பிரசாதம் தங்களுக்கு வரவில்லை என்றும் எங்களிடம் புகார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://thirunallarutemple.org) ஆய்வு செய்தபோது, அந்தப் பணம் வரவில்லை என்பதும், வேறு போலி இணையதளத்தின் வாயிலாக அவர்கள் பணம் அனுப்பியதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

அதன்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், திருநள்ளாறு கோயிலில் அர்ச்சகராக பணியாற்றும் வெங்கடேஸ்வரன்(54), பெங்களூருவைச் சேர்ந்த ஜனனி பரத்(38) என்பவர் மூலம் கோயிலின் பெயரில் போலியான இணையதள முகவரியை (www.thirunallartemple.com) உருவாக்கி, பணம் வசூலித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் நேற்று கைது செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், இதில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

x