ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு


ராமநாதபுரம் அருகே காரும்- அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கவிழ்ந்து நொறுங்கிக் கிடக்கும் கார்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் சேதுபதி அரசு கலைக் கல்லூரி முன்பு மதுரை-ராமேசுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசு குளிர்சாதன பேருந்தும், ராமநாதபுரம் நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் கார் கவிழ்ந்து நொறுங்கியது. காரில் பயணித்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த குத்தாலிங்கம் (48), ராதா கிருஷ்ணன் (55), சின்னமுனியாண்டி (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த கருமலையான் (35) ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் அரசு பேருந்தில் பயணித்த ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேரும் லேசான காயமடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த ராமநாதபுரம் நகர் போலீஸார், 108 ஆம்புலன்சுகள் மற்றும் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் மூன்று பேரில் உடல்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வுக்காக உடல்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளது. போலீஸார், விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் கண் அயர்ந்து தூங்கியிருக்கலாம் அல்லது முன்னாள் சென்ற வண்டியை முந்த முயன்றபோது எதிரே வந்த அரசு பேருந்தில் மோதியிருக்கலாம் என தெரிவித்தனர்.

மேலும் விசாரணையில் ஒப்பந்ததாரரான குத்தாலிங்கம், ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக செயல்படுத்தப்பட்டு வரும் காவிரி குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கும் ஒப்பந்தப்பணியில் ஈடுபட்டு வந்ததாகவும், அந்த பணிக்காக பணியாளர்களை அழைத்து வந்தபோது, இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என தெரிய வந்தது.

x