சென்னை: பாரிமுனை அருகே போலீஸ் எனக்கூறி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், ”கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்காவைச் சேர்ந்த சேகர் மகன் சேது (25) என்பவர் ஜனவரி 22ம் தேதி அன்று காலை, பாரிமுனை, வடக்கு கடற்கரை ரயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனம் அருகே நின்றிருந்த 4 நபர்கள் சேதுவை வழிமறித்து நிறுத்தி, நாங்கள் போலீஸ் எனவும், உனது பையை சோதைனை செய்ய வேண்டும் எனவும், சேது-வின் பையை சோதனை செய்து, சேதுவை மிரட்டி அவர் வைத்திருந்த பணம் ரூ.12,000-ஐ பறித்துக் கொண்டு, சேதுவை தாக்கி, காவல் நிலையத்தில் வந்து பணத்தை பெற்றுக் கொள் என நால்வரும் தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக சேது, B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து இவ்வழக்கில் தொடர்புடைய பார்த்தசாரதி, சையது இப்ராஹிம், ரம்ஜான் அலி ஆகிய 3 நபர்களை ஜனவரி 22ம் தேதி அன்று கைது செய்து, அவர்களிடம் இருந்து பணம் ரூ.7,500 மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்து மூவரும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும், வடக்கு கடற்கரை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த சாகுல் ஹமீது, என்பவரை பிப்ரவரி 13ம் தேதி (நேற்று) கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம் ரூ.750 பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி சாகுல் ஹமீது விசாரணைக்குப் பின்னர் பிப்ரவரி 13ம் தேதி அன்று (நேற்று) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.