சென்னை எழிலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது; போலீஸார் அதிரடி


சென்னை: எழிலக கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல் கட்டுப்பாட்டறைக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், ”கடந்த பிப்ரவரி 12ம் தேதி அன்று மாலை, காவல் கட்டுப் பாட்டறையின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய நபர் ஒருவர் சென்னை, சேப்பாக்கம், எழிலகம் கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி, இணைப்பை துண்டித்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த அண்ணா சதுக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழத்தல் பிரிவு (BDDS) மற்றும் காவல் மோப்ப நாய் பிரிவினருடன் ஒருங்கிணைந்து, எழிலக கட்டிட வளாகம் முழுவதும் சோதனைகள் மேற்கொண்டதில் வெடிகுண்டு எதுவும் இல்லை எனத் தெரியவந்தது. இது குறித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அண்ணா சதுக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வேலூர் கொசப்பேட்டை ராமசாரியார் தெரு வெங்கடேசன் மகன் பாலாஜி(42) என்பவரை பிப்ரவரி 13ம் தேதி அன்று (நேற்று) கைது செய்தனர்.

அவரிடம் இருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி பாலஜி விசாரணைக்குப் பின்னர் நேற்று (13.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x