தென்காசி: இலத்தூர் வனப்பகுதியில் கடந்த 11ம் தேதி எரிந்த நிலையில் உடல் கிடந்தது தெரியவந்தது. உடலை மீட்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டு, சிவகாசியைச் சேர்ந்த ஜான் கில்பர்ட் என்பவரைக் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சிவகாசியைச் சேர்ந்த தொழிலாளி ஜான் கில்பர்ட், அதே ஊரைச் சேர்ந்த கமலி (30) என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 4 வயதில் மகள் உள்ளார். கணவன், மனைவிக்டையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜான் கில்பர்ட், வீட்டில் கமலியை கொலை செய்துள்ளார். பின்னர், தனது நண்பருக்குச் சொந்தமான காரை இரவலாக வாங்கி, கார் டிக்கியில் கமலியின் உடலை வைத்து, தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2 நாட்களாக சுற்றித் திரிந்துள்ளார்.
தொடர்ந்து, இலத்தூர் வனப் பகுதியில் கமலியின் உடலை தீ வைத்து எரித்துள்ளார். ஜான்கில்பர்ட் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் தங்க திருப்பதியை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.