திருச்சி அதிர்ச்சி: அய்யம்பாளையத்தில் 10 ஆண்டுகளாக அலோபதி மருத்துவம் பார்த்த நர்ஸ் கைது


திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு மருத்துவர் போல சிசிச்சை அளித்த நர்ஸ் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சா,அய்யம்பாளையம் தரகுகாரன் கொட்டத்தைச் சேர்ந்தவர் கமலம் (44). கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த மாதம் காய்ச்சல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் சா.அய்யம்பாளையம் தெற்குமேடு பகுதியைச் சேர்ந்த காமாட்சி (45) என்பவரிடம் சிகிச்சை பெற சென்றார். அப்போது, அவர் கமலத்துக்கு ஊசி போட்டுள்ளார். தவறான முறையில் ஊசி போட்டதால், கடந்த சில நாட்களில் கமலத்தின் இடுப்புப் பகுதிகள் அழுகும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, அவரது மகன் பாலமுருகன், கமலத்தை சமயபுரம் இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அதன் பின்னர் கமலம் மேல் சிசிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின்பேரில் மண்ணச்சநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில், நர்சிங் படிப்பு படித்த காமாட்சி, திருச்சி பகுதியில் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு டாக்டர் மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, காமாட்சியை மண்ணச்சநல்லூர் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

x