சேலம்: அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆய்வக தொழில்நுட்புநர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் இரும்பாலை சாலையில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் ஆய்வக தொழில்நுட்புநராக வேலு (57) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கல்லூரி மாணவிகள், டீன் தேவி மீனாளிடம் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள டீன் தேவி மீனாள், விசாகா கமிட்டி அமைத்து மருத்துவ மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும், ஆய்வக தொழில்நுட்புநர் வேலுவிடம் நடத்திய விசாரணையில், வாட்ஸ்-அப் மூலம் ஆபாச குறுந்தகவல்களை மாணவிகளுக்கு அனுப்பியதை ஒப்புக் கொண்டார்.
இது குறித்த விசாரணை அறிக்கையை சென்னை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவின் பேரில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி டீன் தேவி மீனாள், ஆய்வக தொழில் நுட்புநர் வேலுவை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இது குறித்து டீன் தேவி மீனாள் கூறும்போது, மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்யப்பட்டு அரசுக்கு விசாகா கமிட்டியின் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வேலு தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து இது சம்பந்தமாக விசாரணை நடந்து வருகிறது, என்றார்.