கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள கட்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால கண்ணன் (50). இவரது மனைவி விஜயா (48). இவர்களுக்கு திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. கோபால கண்ணன் கடந்த 5 ஆண்டுகளாக கோவையில் உள்ள ஒரு கம்பெனியில் சமையல் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் விஜயாவிற்கும், எதிர்வீட்டில் வசித்து வந்த தேவநாதன் (57) என்பவருக்கும் இடையே கூடா நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த கோபால கண்ணன் கோவைக்கு செல்லாமல் கடந்த மூன்று மாதங்களாக வீட்டிலேயே தங்கிவிட்டார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் கோபால கண்ணன் வெளியில் சென்றுவிட்டு, நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பினார். அப்போது விஜயா சமைத்து வைத்த மீன் குழம்பை சாப்பிட்டு தூங்கச் சென்றார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை கோபால கண்ணன் வாயில் நுரை தள்ளியபடி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோபால கண்ணன் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து கோபால கண்ணன் தந்தை ராதா கிருஷ்ணன் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “தனது மருமகள் விஜயாவிற்கும், அதே ஊரைச் சேர்ந்த தேவநாதன் என்பவருக்கும் கூடா நட்பு இருந்தது. நேற்று முன்தினம் மாலை மகனுக்கும் மருமகளுக்கும் வாய் சண்டை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விஜயா, தேவநாதனுடன் சேர்ந்து வீட்டில் இருந்த புற்று செல்லுக்கு அடிக்கும் மருந்தை மீன் குழம்பில் கலந்து கொடுத்து எனது மகனை கொலை செய்துவிட்டனர்” என குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீஸார் வழக்கு பதிவு செய்து நேற்று விஜயா, தேவநாதன் இருவரையும் கைது செய்தனர்.