செஞ்சி அருகே 13 வயது சிறுமி தற்கொலை: தவெக மாவட்ட செயலாளர் போக்சோவில் கைது


விழுப்புரம்: செஞ்சி அருகே நரசிங்கராயன் பேட்டை பகுதியில் தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பில் இருந்த 13 வயது சிறுமி ஒருவர், அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இச்சிறுமியின் தாயார் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தேனன் என்பவரின் மகன் சரவணன் (25) என்பவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, குறிப்பிட்டச் சிறுமி பள்ளிக்கு செல்லும்போது அவரை வழி மறித்து காதலிப்பதாக தெரிவித்துள்ளார். பயந்து போன அச்சிறுமி இதுபற்றி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர், சரவணனின் தந்தையிடம் இதுபற்றி முறையிட்டுள்ளார். சரவணனின் தந்தையும் இனி அவ்வாறு நடக்காது என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடைபெற்ற உறவினர் காதணி நிகழ்ச்சிக்கு சென்ற அச்சிறுமியை சரவணன் கையைப் பிடித்து இழுத்து, ”நீ என்னை திருமணம் செய்தும் கொள்ள வேண்டும் இல்லையென்றால் உன்னை சும்மா விட மாட்டேன்’ என மிரட்டியதாக கூறப்படுகிறது. வீட்டுக்குச் சென்ற அச்சிறுமி தன் தாயிடம் நடந்ததை கூறியுள்ளார்.

காலையில் பேசிக் கொள்ளலாம் என்று கூறி உறங்கச் சென்ற நிலையில், சிறிது நேரம் கழித்து வீட்டில் உள் அறைககுச் சென்று பார்த்த போது, உறவினரின் கை குழந்தை ஒன்று தூங்குவதற்காக கட்டப்பட்டிருந்த புடவையில் அச்சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் மயங்கி கிடந்தார். அதிர்ச்சியடைந்த அக்குடும்பத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனை க்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், செஞ்சி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி போக்சோ சட்டம் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சரவணன் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக சரவணனின் சகோதரி சங்கீதா (32) என்பவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சரவணன் தமிழக வெற்றி கழகத்தின் விழுப்புரம் வடமேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

x