மதுரை: வங்கியில் ஏலத்துக்கு வரும் வீட்டை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.12.50 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மதுரை மாட்டுத்தாவணி அருகிலுள்ள டிஎம். நகரைச் சேர்ந்த ரவி மனைவி சாந்தி. இவருக்கும், ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தாமரைக் கண்ணன் மனைவி தமிழ்ச் செல்விக்கும் பழக்கம் இருந்தது. தமிழ்ச்செல்வி, "தனது கணவர் வங்கியின் மூலம் ஏலம் விடும் வீடுகளை வாங்கி விற்கிறார். அவரது முயற்சியில் வீட்டு ஒன்றை வாங்கிக் கொடுப்பதாக" ஆசைவார்த்தை கூறினார். இதனை சாந்தி நம்பினார். இந்நிலையில், அய்யர்பங்களா மகாலட்சுமி நகரிலுள்ள வீடு ஒன்றை சாந்திக்கு காண்பித்தனர்.
அந்த வீட்டை ரூ.27 லட்சம் விலை பேசி முன் பணமாக ரூ.12.50 லட்சம் வங்கியில் செலுத்தினால் தான் வீட்டை வாங்க முடியும் எனக் கூறினர். இதன்படி, பல்வேறு வகையில் ரூ.12.50 லட்சத்தை சாந்தி ஏற்பாடு செய்தார். கடந்த 2021 மார்ச்சில் செந்தாமரைக் கண்ணன், அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோரிடம் அவர்களது வீட்டில் வைத்து சாந்தி பணத்தைக் கொடுத்தார்.
ஆனால், சாந்திக்கு கூறியபடி கணவன், மனைவி இருவரும் வீட்டை வாங்கி கொடுக்க முயற்சிக்கவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டும் தரவில்லை. தொடர்ந்து வீட்டுக்குச் சென்று பணத்தைக் கேட்டபோது சாந்தியை தாக்கி தம்பதியர் கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து சாந்தி நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்ற உத்தரவின்பேரில் செந்தாமரைக் கண்ணன், தமிழ்ச்செல்வி ஆகியோர் மீது கரிமேடு போலீஸார் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.