தேனி: சிறுசேமிப்பு சீட்டு மூலம் பலரிடம் பணம் பெற்று ரூ.23 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 4 பேரை தேனி போலீஸார் கைது செய்தனர்.
மேலக் கூடலுாரை சேர்ந்தவர் தமிழரசி (64). இவரது வீட்டுக்கு அருகே சண்முகப் பிரியா (50) என்பவர் வசிக்கிறார். சண்முகப் பிரியா தனது குடும்பத்தினருடன் இணைந்து தீபாவளி சிறு சேமிப்பு சீட்டு நடத்துவதாகவும், இதில் வாரந்தோறும் குறிப்பிட்ட தொகை செலுத்தினால் 52 வாரங்கள் முடிவில் வட்டியுடன் பணம் தருவதாகக் கூறியுள்ளார். தமிழரசியும், அவரது குடும்பத்தினரும் வாரந்தோறும் தவணை முறையில் மொத்தம் ரூ.4.85 லட்சம் செலுத்தினர்.
இது தவிர அப்பகுதியைச் சேர்ந்த மேலும் 39 பேர் ரூ.18.15 லட்சம் செலுத்தியுள்ளனர். மொத்தம் ரூ.23 லட்சத்தை பெற்றுக் கொண்ட சண்முகப் பிரியா குடும்பத்தினர், பேசியபடி வட்டியை தரவில்லை. அசல் பணத்தையும் திருப்பித் தரவில்லை. இது தொடர்பாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத்திடம் தமிழரசி புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் சண்முகப் பிரியா, அவரது மகள்கள் மவுனிகா, அஜிதா, மகன் தீபக்ராஜ், அஜிதாவின் கணவர் கர்ணன் ஆகிய 5 பேர் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தீபக் ராஜ் முன்ஜாமீன் பெற்ற நிலையில், மற்ற 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.