மதுரையில் தோரணவாயில் இடிந்து விழுந்து பொக்லைன் டிரைவர் உயிரிழப்பு - மாநகராட்சி மீது வழக்கு


பழமையான தோரணவாயிலை இடித்தபோது இடிபாடுகள் விழுந்து பொக்லைன் டிரைவர் உயிரிழந்தார்.

மதுரை: மதுரையில் பழமையான தோரணவாயிலை இடித்தபோது, பொக்கலைன் மீது இடிபாடுகள் விழுந்து டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், தோரணவாயிலை இடித்ததே இந்த துயரச் சம்பவத்துக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு மதுரையில் 1981-ம் நடத்தபோது, மாநாட்டு நினைவாக நகரின் பல்வேறு பகுதிகளிலும் சந்திப்பிலும் பிரம்மாண்ட நுழைவுவாயில் தோரணங்களும், தமிழறிஞர்களுக்கு சிலைகளும் அமைக்கப்பட்டன. இதில், மதுரை மாநகரின் கிழக்கு நுழைவாயில் பகுதியான மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் அருகே நக்கீரர் தோரண வாயில் கட்டப்பட்டிருந்தது. தற்போது மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வணிக நிறுவனங்கள், போக்குவரத்து பெருக்கம் போன்றவற்றால் மாட்டுத்தாவணி சாலை விரிவாக்க பணிகளும் நடைபெற்றுள்ளது.

இதில் நாள்தோறும் நக்கீரர் தோரண வாயில் உள்ள சாலை வழியாக பல்லாயிரக்கணக்கான வாகனங்களும் ஆயிரக்கணக்கான பேருந்துகளும் கடந்து செல்லும் நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால், தோரணவாயிலை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள நக்கீரர் தோரண வாயில் மற்றும் கே.கே.நகர் மாவட்ட நீதிமன்றம் அருகேயுள்ள தோரணவாயில் ஆகிய இரண்டு தோரண வாயில்களையும் இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள நக்கீரர் தோரணவாயில் கட்டிடத்தை இடிக்கும் பணியானது புதன்கிழணை இரவு 11 மணியளவில் மாநகராட்சி சார்பில் தொடங்கியது. அப்போது போலீஸார் பாதுகாப்புடன் சிறிது நேரம் மாட்டுத்தாவணி சாலையில் போக்குவரத்துக்கும், பொதுமக்ககள் நடமாடவும் தடை விதிக்கப்பட்டு தோரணவாயிலை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்டது.

தோரண வாயிலின் ஒருபுறம் உள்ள தூணின் அருகே பொக்லைன் இயந்திர ஆப்ரேட்டர் இடித்த போது திடீரென தோரணவாயில் அப்படியே இடிந்து பொக்லைன் இயந்திரம் மீது விழுந்தது. இதில் பொக்லைன் ஆப்ரேட்டரான மதுரை மாவட்டம் உலகாணி அருகேயுள்ள பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் (21) என்ற இளைஞர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பொக்லைன் இயந்திரத்தின் அருகே நின்று கொண்டிருந்த ஒப்பந்ததாரரான மதுரை சம்பக்குளத்தைச் சேர்ந்த நல்லதம்பி காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து நடந்தபோது மாநகராட்சி உயர் அதிகாரிகள் ஒருவர் கூட அங்கு இல்லை என்பதும், மாநகராட்சி முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காமல்
அலட்சியம் காட்டியதும்தான், இந்த விபத்துக்கு காரணம், அதிர்ஷ்டவசமாக போக்குவரத்து இல்லாததால் பொதுமக்கள் இந்த விபத்தில் சிக்கவில்லை என்று இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறுகையில், “காங்கிரீட் பில்லர் இருக்கும் என இடித்துள்ளனர். ஆனால், செங்கல்களை கொண்டு தோரணவாயில் கட்டியதால் எதிர்பாராதவிதமாக முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. பில்லர் இல்லை என்பது விழுந்த பிறகுதான் தெரிந்தது. பொதுவாக பழமையான கட்டிடங்களை இடிக்கும்போது, மாநகராட்சி பொதுப்பணித்துறையிடம் அந்த கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை, அது எதைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும். அதற்கு மேலாக மண் பரிசோதனையும் செய்ய வேண்டும்.

இதுபோன்ற பரிசோதனை செய்தபிறகே கட்டிடங்களை இடிக்க வேண்டும். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் இவற்றில் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும், ஆய்வும் மேற்கொள்ளாமல் மிக அலட்சியமாக கட்டிங்களை இரவோடு இரவாக இடித்து தள்ளிவிடாலம் என்று அனுகியதாலே இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது,” என்றனர்.

பொக்லனை இயந்திரத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த நாகலிங்கத்தின் உடலை 2 மணி நேரத்துக்கு பின்னரே, கிரேன்கள் மூலம் தோரண வாயில் தூண்கள் அகற்றப்பட்ட பிறகே மீட்கப்பட்டனர். அவரது உறவினர்கள் உடலலை வாங்க மறுத்து மதுரை அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆளும்கட்சியினர் பின்னணியில் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணம் பெற்று தருவதாக கூறியதின் அடிப்படையில் போராட்டத்தை உறவினர்கள் கைவிட்டு உடலை வாங்கி சென்றனர்.

வழக்குப் பதிவு: பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தக்கூடிய பிரதான சாலையில் உள்ள பிரம்மாண்டமான தோரண வாயில் கட்டிடத்தை இடிக்கும் பணியின் போது உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதால் இதுபோன்று விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.

போலீஸாரிடம் கேட்டபோது, “பணியின்போது அலட்சியமாக செயல்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது மூன்று பிரிவுகள் கீழ் புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்” என்று தெரிவித்தனர். மாநகராட்சி ஆணையாளர் சித்ராவிடம் கேட்டபோது, “கட்டிடத்தை இடிப்பதற்கு முறையான நடைமுறையைதான் பின்பற்றியுள்ளோம். அதிகாரிகளிடம் விசாரிக்கிறோம். தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

x