ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 2 டன் சுக்கை ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாருக்கு (ஓசிஐயு சிஐடி) இலங்கைக்கு சுக்கு கடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் வியாழக்கிழமை இரவு திருப்புல்லாணி அருகே தோப்புவலசை கல்காடு கடற்கரையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கடற்கரையோரம் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை அறிந்த போலீஸார், இதை ஏற்ற வரும் படகை பிடிப்பதற்காக மறைந்திருந்தனர். ஆனால் அந்தப் படகு கரைக்கு வரவில்லை. இதனையடுத்து ஓசிஐயுடி சிஐடி போலீஸார் 50 மூடைகளில் இருந்த 2 டன் சுக்கை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
இதையடுத்து, சுக்கு மூடைகளை திருப்புல்லாணி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இன்று திருப்புல்லாணி போலீஸார் சுக்கு மூடைகளை கீழக்கரை சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீஸாரும், சுங்கத் துறையினரும் விசாரணை செய்து வருகின்றனர்.