கரூர்: போலீஸ் பிடிக்கும்போது தப்பியோடி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் கருப்பத்தூரில் பிப்.6-ம் தேதி இரவு நாகராஜ் மற்றும் சங்கர் என்கிற வெட்டு சங்கர் இடையே ஏற்பட்ட தகராறில் சங்கர் என்கிற வெட்டு சங்கர் வாழை இலை அறுக்கும் அரிவாளின் பின்பக்கத்தால் நாகராஜை தாக்கியதில் தலையில் காயமடைந்தார்.
இதுகுறித்து லாலாபேட்டை போலீஸில் நாகராஜ் புகார் அளித்தார். குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார், லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீஸார் பிப்.7-ம் தேதி பிள்ளாபாளையம் அருகில் வைத்து சங்கரை கைது செய்ய முயன்றனர். அப்போது, சங்கர் தப்பிக்க முயற்சி செய்து பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில், இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரவுடி சங்கர் மீது கரூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களிலுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 6 நாட்களாக சிகிச்சையில் இருந்த குற்றவாளி வெட்டு சங்கர் சிகிச்சை பலனின்றி இன்று (பிப்.13) உயிரிழந்தார்.