மானாமதுரை அருகே பட்டப்பெயர் சொல்லி அழைத்ததால் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவரை வெட்டிய இளைஞரையும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பிடாவூரைச் சேர்ந்த ராமன் மகன் அய்யாச்சாமி (20). இவர், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலை கல்லூரியில் பி.எஸ்சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை கல்லூரியிலிருந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் அய்யாச்சாமி சென்று கொண்டிருந்தார். மேலப்பிடாவூர் சமுதாயக் கூடம் அருகே நின்று கொண்டிருந்த வினோத்குமார் (21), ஆதீஸ்வரன் (22), வல்லரசு (21) ஆகியோரை பார்த்ததும் வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்களோடு அய்யாச்சாமி பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, வினோத்குமாரை ‘பட்டப்பெயர்’ சொல்லி அய்யாச்சாமி அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமார், தான் வைத்திருந்த வாளால் அய்யாச்சாமியின் இரு கைகளையும் வெட்டினார். மேலும், சாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த அய்யாச்சாமி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே, வினோத்குமார், ஆதீஸ்வரன், வல்லரசு ஆகியோர் அய்யாச்சாமி வீட்டை சேதப்படுத்தினர். அய்யாச்சாமியின் தாயார் செல்லம்மாள் அளித்த புகாரின் பேரில் மானாமதுரை சிப்காட் போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வினோத்குமார், ஆதீஸ்வரன், வல்லரசு ஆகியோரை கைது செய்தனர்.