சென்னை: கோடம்பாக்கம் பகுதியில் பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை, கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 35 வயது பெண் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். மேற்படி பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த போபண்ணா ராஜேஷ் கண்ணா என்பவர் அடிக்கடி பின்தொடர்ந்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி அன்று மேற்படி பெண் என்டிஆர் தெருவில் அவர் வேலை செய்து வரும் வீட்டின் வெளியே குப்பைகளை போட சென்ற போது, அங்கு வந்த போபண்ணா ராஜேஷ் கண்ணா மேற்டி பெண்ணை அவதூறாக பேசி, கையை பிடித்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச்சென்றுளளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மேற்படி பெண் சம்பவம் குறித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பிஎன்எஸ் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கோடம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கோடம்பாக்கம் காமராஜர் காலனியை சேர்ந்த போபண்ணா பிரகாஷ் பாபு மகன் போபண்ணா ராஜேஷ் கண்ணா (35) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போபண்ணா ராஜேஷ் கண்ணா விசாரணைக்குப் பின்னர் நேற்று (12.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.