புதுச்சேரி: புதுச்சேரி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் மோட்டார் பைக் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீஸாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள கடப்பேரிக்குப்பத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (27). பெயிண்டர். குயிலாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்(42), குணசேகரன்(24). கட்டித்தொழிலாளர்கள். நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று இரவு பத்துக்கண்ணு பகுதியில் இருந்து காட்டேரிக்குப்பத்துக்கு ஒரு மோட்டார் பைக்கில் புறப்பட்டனர். மோட்டார் பைக்கை சரண்ராஜ் ஓட்டிச் சென்றார். செந்தில், குணசேகரன் இருவரும் பின்னால் அமர்ந்து சென்றனர்.
துத்திப்பட்டு அருகே மூவரும் வந்து கொண்டிருந்தபோது அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் மோட்டார் பைக் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக வில்லியனூர் போக்குவரத்து போலீஸார் மற்றும் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வெகுநேரமாகியும் ஆம்புலன்ஸ் அங்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அங்கு ஒன்று கூடி சாலை மறியல் போராட்டம் செய்ய தயாராகினர்.
இதையடுத்து அங்கு வந்த வில்லியனூர் போக்குவரத்து போலீஸார் மறியல் போராட்டம் செய்ய முயன்றவர்களை சமாதானம் செய்தனர். அதன்பின்னர் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக அந்த இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸில் இறந்த 3 பேரின் உடல்களையும் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விபத்துக்கு போலீஸாரின் அலட்சிய போக்கே காரணம் என குற்றம் சாட்டி துத்திப்பட்டு கிராமத்தில் பொதுமக்கள் இன்று மறியலில் ஈடுபட்டனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை அங்குள்ள தனியார் நிறுவனத்தின் முன்பு வைத்து போராட்டம் நடத்தினர். போலீஸாருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். இது பற்றி அவர்கள் கூறும்போது, துத்திப்பட்டு பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.
சாலையில் மின்விளக்கு வசதியும் இல்லை. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துக்களும் நடக்கிறது என வில்லியனூர் போக்குவரத்து மற்றும் சேதராப்பட்டு காவல் நிலையங்களில் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளோம். போலீஸ் அதிகாரிகளையும் சந்தித்து பேசியுள்ளோம். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக எங்களுக்கு இங்குள்ள தனியார் நிறுவனங்கள் தான் முக்கியம் என்ற போக்கில் செயல்பட்டு வருகின்றனர்.
போலீஸாரின் அலட்சிய போக்கினால் தற்போது 3 அப்பாவிகளின் உயிர்கள் பறிபோய் உள்ளது. இதற்கு போலீஸார் தான் முழு பொறுப்பு. போலீஸார் தான் மூவரையும் கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். என்றனர். இதையடுத்து அங்கு வந்த சேதராப்பட்டு போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிலமணி நேரம் பாதிக்கப்பட்டது.