ராணிப்பேட்டை: அரசு வேலை வாங்கி தருவதாகவும், தனியார் கல்லூரியில் சேர்ப்பதாகவும் கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த ராணிப்பேட்டை முன்னாள் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் ப.சரவணனை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ப.சரவணன் (52). இவர், ராணிப்பேட்டை பாமக முன்னாள் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்தார். இவரிடம், ஓட்டுநராக காட்பாடி அடுத்த வஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (45) என்பவர் பணியாற்றி வந்தார். அப்போது, சிவக்குமாரின் மனைவிக்கு அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.5 லட்சத்தை சரவணன் பெற்றுள்ளார். அதேபோல், பள்ளிகொண்டா அருகே சிவக்குமாருக்கு சொந்தமான விவசாய நிலத்தை ரூ.60 லட்சத்துக்கு சரவணன் முன்னிலையில் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இதில், சிவகுமாருக்கு 50 லட்சம் ரூபாய் மட்டுமே சரவணன் வழங்கியுள்ளார். அதேபோல், சிவக்குமார் தனது மகளுக்கு தனியார் கல்லூரியில் சேர்ப்பதாக கூறி ரூ.1 லட்சத்தை சரவணன் திருப்பி தரவில்லை. இதற்கிடையே, நிலம் விற்றதில் மீதமுள்ள ரூ.10 லட்சம் வாங்கிக்கொடுக்க ரூ.2 லட்சம் கமிஷனாகவும் பெற்றுள்ளார். ஆனால், அரசு பள்ளி ஆசிரியர் பணி, கமிஷனாக பெற்ற ரூ.2 லட்சம், கல்லூரியில் சேர்ப்பதாக கூறி ரூ. 1 லட்சம் என மொத்தம் 8 லட்சம் ரூபாயை சிவக்குமார் பலமுறை சரவணினிடம் திரும்ப கேட்டு வந்தார்.
ஆனால், அவர் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சிவக்குமார் தனது பணத்தை திருப்பி தருமாறு சரவணனிடம், முத்துக்கடை பகுதியில் அவரது வீட்டின் அருகே முறையிட்டுள்ளார். ஆனால், அவர் பணம் தரமறுத்து சிவக்குமாரை அவதூறாக பேசி தாக்கியுள்ளார். படுகாயமடைந்த சிவக்குமார் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் சிவக்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சரவணனை நேற்று கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.