விருதுநகர்: என்.ஜி.ஓ காலனியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கண்ணன் (32). இவரது மனைவி கற்பகம் (32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கண்ணன் மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசுடைமை வங்கியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அவர் தனது மனைவி கற்பகம் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
இதனால் அவர் கோபித்துக் கொண்டு அண்ணன் வீட்டுக்குச் சென்று விட்டார். பின்னர், தனது மனைவியை சமாதானம் செய்து அழைத்து வந்தார். இந்நிலையில் 2022-ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி மனைவியுடன் தகராறு செய்த கண்ணன் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து விருதுநகர் ஊரக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கண்ணனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் கண்ணனுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.