மேட்டூரில் அரசு வேலை வாங்கி தருவதாக போலி நியமன ஆணை: மோசடி நபர் கைது


ஓபிஎஸ் ஆதரவாளர் மணிகண்டன் (எ) ராஜ்குமார்

சேலம்: மேட்டூரை அடுத்த புது சாம்பள்ளியைச் சேர்ந்தவர் சக்திவேல் (42); இவர், சேலம் நீதிமன்ற வளாகத்தில் கடை நடத்தி வருகிறார். இவர், கருப்பூர் வெள்ளாளப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (எ) ராஜ்குமார் (28) என்பவரை (ஓபிஎஸ் ஆதரவாளர்) சந்தித்து, மனைவி, உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கி தரக்கோரி, ரூ.2.50 லட்சத்தை 2023 ஜூன் மாதம் வழங்கியுள்ளார்.

இதையடுத்து தேக்கம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை, ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி செய்வதாக அறிமுகப்படுத்தி, அவரிடம் இருந்து ஆட்சியர் அலுவலகத்தில் கிளெர்க் பணிக்கான பணி ஆணையை வழங்கியுள்ளார். ஆனால் அது போலியான நியமன ஆணை என தெரியவந்தது. தேக்கம்பட்டி மணிகண்டனிடம் பணத்தை திருப்பி கொடுக்கும்படி சக்திவேல் கேட்டுள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு தேக்கம்பட்டி மணிகண்டன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.

இதையடுத்து, வெள்ளாளப்பட்டி மணிகண்டனிடம் பணத்தை கேட்டுள்ளார். கடந்த 6 மாதங்களில் தவணையாக ரூ.2,05,000-ஐ அவர் கொடுத்துள்ளார். இதில் ரூ.45 ஆயிரம் தாமதமானதால் 2024 பிப்ரவரி மாதம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சக்திவேல் புகார் அளித்தார்.

அதன் பேரில், கருமலைக்கூடல் போலீஸார் மணிகண்டனை தேடி வந்த நிலையில் நேற்று அவரை கைது செய்தனர். விசாரணையில், இதேபோல மாவட்டத்தில் பல்வேறு நபர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வாங்கியுள்ளதும், பல்வேறு துறைகளில் போலியான பணி நியமன ஆணைகளை வழங்கியதும் தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

x