திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் அருகே காரில் சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்த வழக்கில் 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூரைச் சேர்ந்தவர் வசந்த் (23). இவர் தனது நண்பர் ஹரிபிரசாத்துடன் காரில் திண்டுக்கல் - பழநி சாலையில் முத்தனம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் பின் தொடர்ந்த சிலர் வசந்த்தை வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் தாடிக்கொம்புவைச் சேர்ந்த குமரேசன் (39), சபரிபாலன் (29), சந்தனகுமார் (32), அடியனூத்தைச் சேர்ந்த சங்கர்மணி (25), திண்டுக்கல்லைச் சேர்ந்த சீனிவாசப் பெருமாள் (25), முத்துச்சாமி (32), சின்ராஜ் (45), செல்லப்பாண்டி (41) ஆகிய 8 பேரை ரெட்டியார்சத்திரம் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: திருப்பூரில் வசந்த் பணிபுரிந்த தனியார் மில்லில், திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவைச் சேர்ந்த அழகுராஜா, அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோரும் வேலை பார்த்துள்ளனர். அப்போது வசந்துக்கும், கலைச்செல்விக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்த அழகுராஜாவை வசந்த் கொலை செய்தார். வசந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தாடிக்கொம்புவில் உள்ள தனது அண்ணன் குமரேசன் வீட்டில் கலைச்செல்வி வசித்து வருகிறார். அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த வசந்த், கலைச்செல்வியை சந்தித்து தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த கலைச்செல்வி, தனது கணவரை கொலை செய்த வசந்த்துடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் கலைச்செல்வியை சந்தித்து வசந்த் பேசியுள்ளார். இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், தனது தங்கைக்கு தொடர்ந்து தொல்லை தந்த வசந்த்தை குமரேசன், தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார் என்று கூறினர்.