அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி - ஓபிஎஸ் அணி நிர்வாகி கைது


மேட்டூர்: மேட்டூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக போலி நியமன ஆணை வழங்கி பல லட்சம் மோசடி செய்த ஓபிஎஸ் அணி தொகுதி அமைப்பாளரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த புது சாம்பள்ளி பகுதியை சேர்ந்த சக்திவேல் (42), இவர் சேலம் நீதிமன்றம் வளாகத்தில் கடையை நடத்தி வருகிறார். இவர் கருப்பூர் வெள்ளாளப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (எ) ராஜ்குமார் (28), ஓபிஎஸ் அணி ஓமலூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளரை சந்தித்து, மனைவி மற்றும் உறவினர்களுக்கு அரசு வேலை கேட்டு, ரூ.2.50 லட்சத்தை கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் வழங்கியுள்ளார். இதையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிளர்க் பதவிக்கான பணி நியமன ஆணை வழங்கியுள்ளார்.

பின்னர், பணி நியமனம் பெற்றவர்கள் பணிக்கு சேர சென்ற போது, போலியான நியமன ஆணை வழங்கியது தெரிந்ததையடுத்து, மணிகண்டனிடம் பணத்தை திருப்பி கொடுக்கும் படி சக்திவேல் கேட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவணை முறையாக ரூ.2,05,000 பணம் கொடுத்துள்ளார். இதில் ரூ.45 ஆயிரம் வழங்க காலதாமதமானதால் கடந்த கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.

அதன் பேரில், கருமலைகூடல் போலீஸார் மணிகண்டனை தேடி வந்த நிலையில் இன்று அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நபர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளதும், பல்வேறு துறைகளில் போலியான பணி நியமன ஆணைகளை வழங்கியுதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

x