கோவை: கோவை தெலுங்குபாளையம் அருகே, பாஜக நிர்வாகியின் அலுவலகம் மீது வீச பெட்ரோல் குண்டுகளை வீச எடுத்துச் சென்ற நபர் காவல்துறையினரிடம் சிக்கினார்.
கோவை செல்வபுரம் காவல்துறையினர், இன்று (பிப்.12) அதிகாலை தெலுங்குபாளையம் பிரிவு அருகே, வழக்கமான வாகனத் தணிக்கை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஒரு இருசக்கர வாகன ஓட்டி வேகமாக வந்தார்.
சந்தேகத்தின் பேரில், வாகனத் தணிக்கையில் இருந்த போலீஸார் அவரை சிறிது தூரம் விரட்டிப் பிடித்தனர். தொடர்ந்து அவரை விசாரித்த போது, முன்னுக்கு பின்னர் முரணாக பேசினார். அவரை போலீஸார் சோதனை செய்த போது, இரு பெட்ரோல் குண்டுகள் இருந்தது தெரியவந்தது. அதாவது, திரி போடப்பட்ட இரு பாட்டில்கள், அதில் நிரப்புவதற்காக வாட்டர் கேனில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஆகியவை இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் பிடிபட்டவர், கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த நாசர் (34) என்றும், செல்வபுரத்தில் உள்ள பாஜக நிர்வாகியான மணிகண்டன் என்பவருக்கு சொந்தமாக தெலுங்குபாளையத்தில் உள்ள அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், செல்வபுரம் சிவாலய சந்திப்பில் வசித்து வரும் பாஜக நிர்வாகி மணிகண்டனின் அலுவலகத்தில் நாசர் கடந்த சில ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். சமீபத்தில் நாசர் ரூ.5 ஆயிரம் கடன் கேட்டுள்ளார். மணிகண்டன் பணம் இல்லை எனத்தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாசர் அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, அதிகாலை அவரது அலுவலகத்தில் வீசுவதற்காக பெட்ரோல் குண்டுகளை எடுத்துச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து நாசரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து பெட்ரோல் குண்டு, இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
நாசர் மீது முன்னரே 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு, விஸ்வரூபம் படம் வெளியான போது குனியமுத்தூரில் உள்ள ஒரு திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு, சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கு உள்ளிட்டவை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.