காரில் கடத்திவரப்பட்ட ரூ. 2.50 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் @ ராமநாதபுரம்


ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தெலங்கானா மாநிலத்திலிருந்து ராமேசுவரத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.50 கோடி மதிப்புள்ள 250 கிலோ கஞ்சாவை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செயதனர்.

மதுரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு ராமேசுவரத்துக்கு கஞ்சா கடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் இன்று காலை ராமநாதபுரம் பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரைச் சாலை சந்திப்பிலிருந்து ராமேசுவரம் சென்ற கார் ஒன்றை அவர்கள் காரில் விரட்டிச் சென்று ராம்நகர் பெட்ரோல் பங்க் அருகே காரை மடக்கி நிறுத்தினர்.

அப்போது காரை ஓட்டி வந்தவர் தப்பிச் சென்றதால், காரை சோதனையிட்டனர். அதில் காரின் பின்பக்கம் சிறிய, சிறிய பார்சல்களாக கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதன்பின் ரூ. 2.50 கோடி மதிப்புள்ள 250 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்து, மதுரை கொண்டு சென்றனர்.

விசாரணையில் தெலங்கானா மாநிலத்திலிருந்து ராமேசுவத்துக்கு கஞ்சாவை கடத்தி வந்ததும், இது கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனவும் தெரிய வந்தது. காரில் இருந்து தப்பிச் சென்றவர் யார் எனத் தெரியவில்லை. இதுகுறித்து மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

x