நாகர்கோவில்: குமரி மாவட்டம் மாத்தூரில் ஆசியாவில் மிகப்பெரிய தொட்டிப் பாலம் உள்ளது. கடந்த 1968-ம் ஆண்டு காமராஜர் ஆட்சிக் காலத்தில் இது அமைக்கப்பட்டது. இந்த தொட்டி பாலத்தை காண சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மாத்தூர் தொட்டிப்பாலத்தின் நுழைவு பகுதியில் காமராஜர் உருவம் பொறித்த கல்வெட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலையில் இந்த கல்வெட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இது குறித்து அப்பகுதியினர் திருவட்டாறு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரித்தனர். சுற்றுலாத்தலமான மாத்தூர் தொட்டி பாலத்தில் போதிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் காமராஜர் உருவம் பொறித்த கல்வெட்டு உடைக்கப்பட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதியில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக் களும் இயங்கவில்லை. இதனால் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் மதுபோதையில் இங்கு வரும் நபர்கள் இச்செயலில் ஈடுபட்டார்களா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வெட்டு உடைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி நேற்று மாலை தொட்டிப்பால நுழை வாயின் முன் அமர்ந்து காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். தாரகை கத்பர்ட் எம்எல்ஏ தலைமை வகித்தார். போராட்டத்தில் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் பினுலால், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களிடம் திருவட்டாறு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.