ஆக்சிஜனுக்கு பதிலாக நைட்ரஸ் ஆக்சைடு - அரசு மருத்துவமனையில் இளம்பெண் இறந்த வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு


மதுரை: அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு ஆக்சிஜனுக்கு பதிலாக தவறுதலாக நைட்ரஸ் ஆக்சைடு ஏற்றப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குமரி மாவட்டம் மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ருக்மணி. இவர் கருக்கலைப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்காக 2011-ல் நாகர்கோவிலில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தவறுதலாக ஆக்சிஜனுக்கு பதிலாக நைட்ரைஸ் ஆக்சைடு வாயு ஏற்பட்டது. இதனால் ருக்மணி கோமா நிலைக்கு சென்றார். அவர் 2012-ல் உயிரிழந்தார்.

இது தொடர்பாக பணியில் கவனக்குறைவாக இருந்தாக செயல்பட்டதாக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் என 12 பேர் மீது ஆசாரிப்பள்ளம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மருத்துவர் ரவீந்திரன் மற்றும் விவேகானந்தன், பர்னபாஸ், ராஜ்குமார், தேவி, மாயகிருஷ்ணன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: ''குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுக்கு பதிலாக, நைட்ரஸ் ஆக்சைடு ஏற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தவறு காரணமாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.28 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

விதிப்படி ஆக்ஸிஜன் சிலிண்டர் கருப்பு நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு, வால்வுகள் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். நைட்ரஸ் ஆக்சைடு சிலிண்டர்கள் நீல வண்ணத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு, அதன் வால்வு நீல நிறத்தில் இருக்க வேண்டும். ஆனால் ருக்மணிக்கு நைட்ரஸ் ஆக்சைடு வழங்கப்பட்ட சிலிண்டர் சரியான வண்ணத்தில் இல்லாமல், அதன் வால்வு பகுதி வெள்ளை வெளேர் நிறத்திலேயே இருந்துள்ளது.

மருத்துவர்கள் எப்படியும் உயிரை காப்பாற்றி விடுவார்கள் என நம்பியே நோயாளிகள் மருத்துவர்கள் சொல்வதை கேட்கின்றனர். இதனால் மருத்துவர்கள் அதிகப்படியான பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நாகர்கோவில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுதாரர்கள் மீதான வழக்கை தினமும் விசாரணை நடத்தி 6 மாதத்தில் முடிக்க வேண்டும்.'' இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.



x