தண்டவாளத்தில் சிக்கிய காதலியை மீட்க முயன்ற காதலனும் ரயில் மோதி மரணம்: பெருங்களத்தூரில் சோகம்


தாம்பரம்: தாம்பரம் அருகே கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த போது காதலியை எச்சரித்து மீட்க முயன்ற காதலனும் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெருங்களத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பஞ்ச நல்லூர் கிராமம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் விக்ரம் (22) இவர் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியில் படிப்பு கடந்தாண்டு முடித்தார். இவரும் அதே கல்லூரில் உடன் படித்த சிதம்பரத்தை சேர்ந்த ஆதிலட்சுமி (22) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வேலை தேடி சென்னை வந்து பெருங்களத்தூர் அருகே உள்ள விடுதியில் தனித்தனியாக தங்கி சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு பணி முடிந்து ரயிலில் வந்து இறங்கிய இருவரும் பேசியபடி தங்களின் விடுதிக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடந்த போது செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு சென்ற மின்சார ரயில் மோதி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தாம்பரம் ரயில்வே காவல் ஆய்வாளர் வைரவன் வழக்குப் பதிவு செய்து பிரேதங்களை கைப்பற்றி தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததுடன் வழக்குப் பதிவு செய்து தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டதா ? அல்லது காதலர்கள் தற்கொலையா ? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் ரயிலில் அடிபட்டு இறந்து போன காதலர்கள் இருவரின் விவகாரமும் இரு வீட்டாருக்கும் தெரியும் என்பதும், பெற்றோர் இடத்தில் எவ்வித எதிர்ப்பும் இல்லை என்பதும் தெரிய வந்தது. மேலும், கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த போது விபத்து நடந்ததாகவும், முதலில் பெண் விபத்தில் சிக்கும் நிலையில் இருந்தபோது, விக்ரம் மீட்க முயன்ற போது இருவர் மீது ரயில் மோதியது என ரயில்வே ஓட்டுநர் போலீஸாரிடம் தெரிவித்தார். தாம்பரம் இரும்பு பாதை ரயில்வே போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x