38 பவுன் நகைகள், துப்பாக்கி சிக்கிய விவகாரம்: விருதுநகர் ஆயுதப்படை காவலர் கூட்டாளியுடன் கைது!


விருதுநகர்: கைத் துப்பாக்கி, 38 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றிய வழக்கில் ஆயுதப்படை காவலர் மற்றும் அவரது கூட்டாளியை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் - சாத்தூர் இடையே பட்டம்புதூர் விலக்கு அருகே உள்ள ஆசிரியர் காலனி சாலையில் கேட்பாரற்று பைக் ஒன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை வெகு நேரமாக நின்றிருந்தது. அதன் டேங் கவரில் கைத் துப்பாக்கி, 5 தோட்டாக்கள், 38 பவுன் நகைகள், ரொக்கப் பணம் 50 ஆயிரம் ஆகியவை இருந்ததை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைப்பற்றினர். அப்போது, அந்த வழியாக மற்றொரு பைக்கில் வந்த 2 பேர், போலீஸாரை கண்டதும் தப்பியோடினர்.

போலீஸார் துரத்தியதில் ஒருவர் சிக்கினார். விசாரணையில் அவர் விருதுநகர் ஆயுதப்படைக் காவலர் தனுஷ்கோடி (33) என்பது தெரியவந்தது. தப்பியோடிய மற்றொருவரை தனிப்படையினர் தேடி வந்தனர்.

பிடிபட்ட காவலர் தனுஷ்கோடியிடம் நடத்திய விசாரணையில், தப்பியோடிய நபர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் (26) என்பதும், இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதும், சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, பிடிபட்ட காவலர் தனுஷ்கோடி நேற்று கைது செய்யப்பட்டார். அதோடு, பழநியில் பதுங்கியிருந்த சுரேஷையும் தனிப்படையினர் நேற்று கைது செய்தனர்.

x