தம்பதியைத் தாக்கி 15 பவுன் நகை கொள்ளை: காட்பாடியை சேர்ந்த 5 பேர் கைது


திருப்பத்தூர்: தம்பதியைத் தாக்கி 15 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச்சென்ற வழக்கில் காட்பாடியைச் சேர்ந்த 5 பேரைக் காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம். இவரது மகன் வீரபத்திரன் (31). கார் ஓட்டுநரான இவரது வீட்டுக்குக் கடந்த 3-ம் தேதி நள்ளிரவு நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் வீரபத்திரன், மனைவி சத்யா மற்றும் வீரபத்திரனின் தாய் ஆகியோரை தாக்கி 15 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து குரிசிலாப்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் காட்பாடி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (28), மேகராஜ், சசிதரன், கர்ணன் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரைக் கைது செய்தனர். மேலும், ஜாபர் என்பவரைத் தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட 15 பவுன் தங்க நகைகள் நாகப்பட்டினம் பகுதியில் உள்ள அடகுக் கடையில் வைத்துள்ளதாக சுரேஷ் அளித்த தகவலின் பேரில் அந்த நகைகளை மீட்கத் தனிப்படை காவல் துறையினர் நாகப்பட்டினத்துக்கு சுரேஷூடன் விரைந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

x