பெண் தோழியின் தாயை கழுத்தை நெரித்துக் கொன்ற இளைஞர் கைது: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்


சென்னை: ஜெ.ஜெ.நகர் பகுதியில் பெண் தோழியின் தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னை, முகப்பேர் கிழக்கு சர்ச் ரோடு, அரிஹந்த் அப்பார்ட்மென்ட்டில் மைதிலி (63) என்பவர் தனது கணவரை பிரிந்து மகள் ரித்திகா என்பவருடன் வசித்து வருகிறார். ரித்திகா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ரித்திகா அதே பகுதியில் வசித்து வரும் ஷ்யாம் கண்ணன் என்பவருடன் பழகி வந்துள்ளார்.

நேற்று (10.02.2025) இரவு ரித்திகா வீட்டிற்கு காலதாமதமாக வந்தபோது, தாயார் மைதிலி கண்டித்து சத்தம்போட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ரித்திகா தனது வீட்டிலிருந்து வெளியேறி அவரது ஆண் நண்பர் ஷ்யாம் கண்ணனுடன் வீட்டிற்கு வெளியே பேசிக்கொண்டிருந்த போது, மைதிலி வீட்டிலிருந்து வெளியே வந்து அவரது மகள் ரித்திகாவை சமாதானம் செய்து வீட்டிற்கு சென்று பேசிச்கொள்ளலாம் என்று அழைத்து சென்றபோது, ரித்திகாவை அவரது தாய் மைதிலி சத்தம்போட்டுள்ளார்.

உடனே ஷ்யாம் கண்ணன் ஏன் சத்தம் போடுகிறீர்கள் என கேட்ட போது, மைதிலி எனது மகளை சத்தம்போடுவேன் என்று கூறிய போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஷ்யாம் கண்ணன் மைதிலியிடம் வாக்குவாதம் செய்து அவரது கழுத்தை நெறித்துள்ளார். மைதிலி சம்பவயிடத்திலேயே இறுக நெரித்ததால் இறந்து விட்டார். தகவலறிந்த ஜெ.ஜெ.நகர் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து. ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணைசெய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சிவகாசியை சேர்ந்த சக்திவேல்ராஜன் மகன் ஷ்யாம் கண்ணன் (22) என்பவரை இன்று (11.02.2025) சீதக்காதி சாலை காவல் நிலையம் அருகே கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஷ்யாம் கண்ணன் பட்டப்படிப்பு முடித்து, சென்னை, முகப்பேர், கோல்டன் ஜார்ஜ் நகர் பகுதியில் தங்கிருந்து அங்குள்ள தனியார் ஐஏஸ் அகாடமியில் போட்டித்தேர்வுக்கு படித்து வருவது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட ஷ்யாம் கண்ணன் இன்று (11.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x