சேலம்: சேலம் அருகே சொத்து தகராறில் தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி அரகே உள்ள மணச்ச நல்லூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (60). இவரது மனைவி கவுரம்மாள் (50). இவர்களுக்கு மூன்று மகன், ஒரு மகள் உள்ளனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் பொன்னுசாமிக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. பொன்னுசாமி காடையாம்பட்டி அருகே உள்ள அம்மனேரி பகுதியில் உள்ள ஜல்லி கிரசரில் காவலாளியாக மனைவியுடன் அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார்.
இவரது மகன் சின்னசாமி (30) தந்தையிடம் சொத்தில் பங்கு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் அம்மனேரிக்கு 2 பேருடன் வந்த சின்னசாமி கடன் அதிகமாக உள்ளதால் சொத்தை பிரித்து கொடுக்கும்படி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சின்னசாமி மறைத்து வைத்திருந்த கத்தியால் தந்தையை குத்தியுள்ளார். தடுக்க வந்த தாய்க்கும் கத்திக்குத்து விழுந்தது.
பலத்த காயமடைந்த பொன்னுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த கவுரம்மாளை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இது குறித்து தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து சின்னசாமி, அவரது நண்பர்களான தருமபுரியை சேர்ந்த சீனிவாசன் (32), பொம்மிடியைச் சேர்ந்த ஆகாஷ் (20) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.