மதுரையில் ஆளை மாற்றி கொலை செய்த அதிர்ச்சி: ஆம்னி பேருந்து முகவர் படுகொலை


மதுரை: ஆள்மாறாட்டத்தில் ஆம்னி பேருந்து பயணச்சீட்டு முகவர் கொலை செய்யப்பட்டார்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் மதுரை மாட்டுத் தாவணி ஆம்னி பேருந்து நிலையத்திலுள்ள தனியார் பேருந்து அலுவலகம் ஒன்றில் பயணச்சீட்டு முகவராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இவரது வீட்டுக்கு அருகிலுள்ள சந்தனமாரியம்மன் கோயில் பக்கத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரை கும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியதாகத் தெரிகிறது. இது குறித்து தகவலறிந்த திடீர் நகர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில், இவரை கொலை செய்த கும்பல் அப்பகுதியில் வேறொருவரை கொலை செய்ய தேடி வந்ததாகவும், ஆள்மாறாட்டத்தில் ராமசுப்பிரமணியனை கொலை செய்துவிட்டு தப்பியதாகவும் தெரிகிறது. போலீஸார் கொலைக் கும்பலை தேடி வருகின்றனர். கொலையாளிகள் சிக்கினால்தான், கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் கூறுகின்றனர்.

x